கலைக்கழகம்-திரைப்படங்கள்

கலைக்கழகம்-திரைப்படங்கள்.


கலைக்கழகம்-சினிமா




ThumbnailSaguni; மிண்டும் ச்ந்திப்போம்

Thursday, April 11, 2013

பரதேசி



பரதேசி விமர்சனம்

ரிலீசாவதற்கு முன்பே பாலாவின் படங்களில் மிகச்சிறந்த படம் என்ற பெருமையை தட்டி சென்று விட்ட பரதேசி, இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று என்பதை படம் பார்த்த யாராலும் மறுக்க முடியாது.

இந்தியர்களை எப்படி டீ குடிக்கும் பழக்கத்திற்கு ஆங்கிலேயர்கள் அடிமை ஆக்கினார்கள் என்பதையும், அதற்காக அப்பாவி மக்கள் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டார்கள் என்பதையும் மனதில் பதியும் படி சொல்லி இருக்கிறார் பாலா.
1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கிறது கதை. கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், திருமணமுறை என எந்த சலனமும் இல்லாமல் பயணிக்கிறது.

தண்டோரா போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி (எ) ராசா) . வெகுளியான அதர்வாவை காதலிக்கிறார் வேதிகா(அங்கம்மா). வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்லும் அதர்வாவை கங்காணி சந்திக்கிறான். தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், அங்கெ வேலை செய்தால் கூலி நிறைய கிடைக்கும் என்றும், மனைவி மக்களை உடன் அழைத்து வரலாம் என்றும், வருடம் ஒருமுறை சொந்த மண்ணுக்கு வரலாம் என்றும் ஆசை காட்டுகிறான். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்கும் அப்பாவி மக்கள், 48 நாட்கள் கஷ்டப்பட்டு நடந்து தேயிலை தோட்டத்தை அடைகிறார்கள்.

இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம் அடைகிறாள். வீட்டில் இருந்து துரத்தப்படும் அங்கம்மா அதர்வாவின் பாட்டி வீட்டுக்கு வந்து விடுகிறாள். தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா. தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் வெள்ளைக்காரன் பெண்களை தவறாக நடத்துகிறான். இந்த நிலையில் அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி பாட்டியுடன் இருந்து வந்த கடிதம் மூலம் அதர்வாவுக்கு தெரிகிறது.

விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைக்கும் கங்காணி, சம்பளத்தை பிடித்து விட்டு இன்னும் சில வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறான். அங்கம்மாவை பார்க்க துடிக்கும் அதர்வா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது மாட்டிக் கொள்கிறான். மீண்டும் தப்பி ஓடாமல் இருக்க கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பரவி வரும் விஷ காய்ச்சலுக்கு மரகதம் பலியாகி விடுகிறாள். ராசா தப்பித்தானா?

கொத்தடிமைகளின் நிலை என்ன ஆனது என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் பாலா.
கதாநாயகன் அதர்வா முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா, இந்தப் படத்தில் நடிப்பு சாம்ராஜ்யமே நடத்தி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் தன்சிகாவின் நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும் கணமாக்கித்தருகிறது. படத்தின் தரத்தையறிந்து அதற்கேற்ப இசையில் விளையாடி இருக்கிறார் ஜி வி பிரகாஷ். உலகத் தரமான படம் என்று கூறுவார்களே அது இது தானோ என்ற எண்ணம் வருகிறது.

சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ் என படம் முழுக்க பட்டையைக் கிளப்பி இருக்கிறார் பாலா. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் தான் நினைவுக்கு வரும். டீயைப் பார்த்தால் இரத்தம் என்று கூட தோன்றலாம். அந்த அளவுக்கு நெஞ்சைப் பிழியும் வலியை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த வருடத்திற்கான அனைத்து விருதகளையும் பரதேசி படத்துக்கே கொடுத்து விடலாம். நான் பாலாவின் ரசிகன் என இனி காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்லலாம்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.